கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டம்..!


கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டம்..!
x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உபா சட்டத்தில் கைதான 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது.

கோவை,

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார். இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்ட நிலையில் டி.ஐ.ஜி. வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்குமூலத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபின், பழைய புத்தக கடை நடத்தி வந்துள்ளார். அவருக்கு வருமானம் குறைவாக இருந்த நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆனால் முபின், கைதான அப்சர்கான் உதவியுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்து வெடிமருந்துகளை வாங்கி உள்ளார். அவருடைய வீட்டில் இருந்து மொத்தம் 75 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க அவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்ற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கும்பலிடம் இருந்து பணம் பெறப்பட்டு உள்ளதா?. அவருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்? என்பதை அறிய வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேலும் முபின் கேரள சிறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் அசாருதீன் என்பவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே விய்யூரில் உள்ள கேரள சிறை அதிகாரிகளிடம் அசாருதீனை சந்தித்தவர்கள் யார்? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் பட்டியல் கேட்டுள்ளனர். இந்த வழக்கில், கைதான 6 பேரை கோவை நகர தனிப்படையினர் காவலில் எடுத்து விசாரித்த பின் மீண்டும் சிறையில் அடைத்து உள்ளனர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கைதான 6 பேரை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கோவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. கார் வெடிப்பு வழக்கில் முழு பின்னணி குறித்தும் என்.ஐ.ஏ. விசாரிக்க திட்டமிட்டு உள்ளதால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Next Story