கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை


கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை
x

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

கோவை,

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமதுநவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 6 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது.

3 மணி நேரம் விசாரணை

ஜமேஷா முபின் வீட்டில் 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். ஆதரவு தொடர்பான குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் என்.ஐ.ஏ. இந்த வழக்கை விசாரணை நடத்தி வருவதால், சென்னையில் உள்ள பூந்தமல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று, கோவை சிறையில் உள்ள 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஐ.எஸ். தொடர்பு, வெடி மருந்து வாங்க பணம் கொடுத்தவர்கள் யார்? உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்தப்பட்டு, அந்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.இந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பென்டிரைவில் ஐ.எஸ். வீடியோ

இதற்கிடையே கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசார் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையின்போது, பறிமுதல் செய்த செல்போன்கள், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இதில் ஒரு பென்டிரைவில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தம் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. அதில் ஐ.எஸ். இயக்கத்தினர் மிக கொடூரமாக சிலரை கழுத்தை அறுத்து கொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஐ.எஸ். இயக்கத்தின் பிரசார வீடியோக்கள், அவர்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த வீடியோக்கள் இருந்துள்ளன. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜமேஷா முபின் மாமனார் பேட்டி

இதற்கு மத்தியில் கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் மாமனார் அனிபா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஜமேஷா முபினிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஜமேஷா முபினின் குடும்பத்தினர் அவரிடம் இருந்து ஒதுங்கி கொண்டனர். இதையடுத்து அவர் எங்களது வீட்டின் அருகே வசித்து வந்தார். தற்போது உள்ள வீட்டிற்கு கடந்த 1½ மாதங்களுக்கு முன்புதான் சென்றனர். முபின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் குறித்து எனது மகள் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அதற்கு அவர் நாட்டு மருந்து, தேன் விற்பனை செய்யப்போகிறேன் என்றும், அந்த பெட்டிகளில் இருப்பது நாட்டு மருந்து தான் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story