கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை தொடங்கியது


கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 30 Oct 2022 12:19 PM IST (Updated: 30 Oct 2022 12:24 PM IST)
t-max-icont-min-icon

கோவை கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை கோட்டைஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார். இது தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் அதிகாரி கள் கோவையில் முகாமிட்டு ஆரம்ப கட்ட விசாரணை மேற் கொண்டனர். மேலும் கார் வெடிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு 2 அறைகளுடன் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 6 பேர் வந்து விசாரணைக்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

அதன்பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை கார் வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.


Next Story