கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான மேலும் 3 பேருக்கு 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான மேலும் 3 பேரை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி,
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காருக்குள் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இதுதொடர்பாக முதலில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தி அங்கு இருந்த 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் (28), மற்றும் முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) பாய்ந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இந்த வழக்கில் கைதான 6 பேரின் வீடுகள் மற்றும் சந்தேக நபர்களின் வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், கைதான 6 பேரின் நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சந்தேக நபர்கள் உள்பட பலரின் செல்போன், இணையதளம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.
இந்தநிலையில், கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (25), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், இவர்கள் மூவரும் ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் இன்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த நீதிபதி 3 பேரையும் டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.