கோவை: சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணலால் விபத்து - பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர்-இளம்பெண் பலி...!


கோவை: சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணலால் விபத்து - பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர்-இளம்பெண் பலி...!
x
தினத்தந்தி 9 Jun 2022 4:24 PM IST (Updated: 9 Jun 2022 5:04 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த நபர் கட்டுமான பணிக்காக சாலையோரத்தில் மணலை கொட்டி வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ்(வயது25). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மால் வளாகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய பெண் தோழி ஆர்த்தி(19). போளுவாம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்.

கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் முன்பு ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் வேலையில் இருந்து நின்ற ஆர்த்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் ஆர்வமுடன் விளங்கி உள்ளார். சினிமா துறையில் சேருவதிலும் விருப்பத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் மனோஜும், ஆர்த்தியும் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்றனர்.

செல்வபுரம் போலீஸ் நிலையம் அருகே தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்த போது கட்டுமான பணிக்காக சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த எம் சாண்ட் மணலில் ஏறி மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கீழே விழுந்த மனோஜ் மற்றும் ஆர்த்தி பின்னால் வந்த பஸ்சின் பின் சக்கரத்துக்குள் சிக்கினர்.

இந்த விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருவரம் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேற்குப்பகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில,

வடமாநிலத்தை சேர்ந்த அனில் என்பவர், கட்டுமான பணிக்காக சாலையோரத்தில் மணலை கொட்டி வைத்துள்ளார். அந்த மணலில் இருசக்கர வாகனம் சறுக்கியதால்தான் இந்த விபத்து நடந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த விபத்து தொடர்பாக அனில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். பஸ் டிரைவர் பிரபுகுமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story