பட்டிவீரன்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் தேங்காய்கள் தேக்கம்


பட்டிவீரன்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் தேங்காய்கள் தேக்கம்
x

பட்டிவீரன்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி பகுதியில் விலை வீழ்ச்சியால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

தேங்காய் குடோன்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தை நம்பியே உள்ளது.

இப்பகுதி விவசாயிகளின் தென்னை தோப்புகளில் இருந்து மொத்த வியாபாரிகள் நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்களை மொத்த வியாபாரிகள் மட்டைகளில் இருந்து உரித்து தேங்காய்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இவ்வாறு தேங்காய்களை கொள்முதல் செய்யும் தனியார் குடோன்கள் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளில் அதிக அளவில் உள்ளன.

விலை வீழ்ச்சியால் தேக்கம்

இந்தநிலையில் 3 மாதங்களுக்கு முன்பு ஏறுமுகமாக இருந்த தேங்காய் விலை தற்போது குறைந்து வருகிறது. விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய்கள் வரத்து அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் தேங்காய்கள் கிடைத்த தென்னை தோப்புகளில் தற்போது 8 ஆயிரம் தேங்காய்கள் வரை விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் விளைச்சலுக்கு ஏற்ற விற்பனை இல்லாததால் தேங்காய் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் குடோன்களிலும் தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.12 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஒரு தேங்காயின் விலை தற்போது ரூ.7 முதல் ரூ.8 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கொப்பரை தேங்காயின் விலையும் சரிந்து வருகிறது. தேங்காய் விலை மேலும் குறையும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு தேங்காயின் விலை குறைந்தபட்சம் ரூ.15 வரை விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். ஆனால் தற்போது ஒரு தேங்காயின் விலை ரூ.7-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தென்னை விவசாயிகளின் நலன்கருதி அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story