குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன
மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
துர்நாற்றம்
இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
குருத்தழுகல் நோய் பாதிக்கப்பட்ட இளம் கன்றுகளில் குருத்துகள் பழுப்பு நிறமாக மாறும். இலையின் அடித்திசுக்கள் விரைவில் அழுகி உச்சியிலிருந்து எளிதில் பெயர்ந்து விடும். நோய் முற்றிய நிலையில் குருத்துக்கள் வாடி உதிர்ந்து விடும். உச்சியில் உள்ள இளம் இலைகளின் அடிப்பகுதி மற்றும் உச்சியில் உள்ள மென்மையான திசுக்கள் அழுகி வழவழப்பாக மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
முடிவில் உச்சிப்பகுதி அடியோடு சாய்ந்து, மரம் காய்ந்து விடும். அழுகல் மெதுவாக கீழ் நோக்கிப்பரவி இறுதியில் நுனிப்பகுதியை பாதித்து மரத்தையும் அழித்துவிடும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
பருவமழை
நோய் தாக்கப்பட்ட கொண்டைப் பகுதியை அகற்றிவிட்டு 0.25 சதவீத காப்பர் ஆக்சி குளோரைடு ஊற்றி கொண்டைப் பகுதியை நனைக்க வேண்டும். புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழைநீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் 0.25 காப்பர் ஆக்ஸி குளோரைடு நோய் பாதித்த மரத்துக்கு அருகில் உள்ள மரங்களின் கொண்டையில் தெளிக்கலாம்.
சிறிய துளை உள்ள பைகளில் 2 கி. மேன்கோசெப் வைத்து ஓலை, தண்டுடன் இணையும் இடத்தில் கட்டி விடலாம். மழை பெய்யும் போது பையில் இருந்து மருந்து சிறிது சிறிதாக வெளிவரும். இதன் மூலம் மரத்தைப் பாதுகாக்க முடியும். உச்சியில் உள்ள நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி விட்டு அதன் பின் போர்டோ பசை தடவலாம் அல்லது 1 சதவீத போர்டோ கலவையை உச்சியில் நன்கு படும்படி மழைக்கு முன் தெளிக்கலாம். பருவமழைக்கு பின் 0.25 காப்பர் ஆக்ஸி குளோரைடை தெளிக்கலாம்.
வட்டப்பாத்தி
பொதுவாக தென்னையில் நோய் பாதிப்பை தவிர்க்க சரியான ஊட்டச்சத்து அவசியமாகிறது. ரசாயன உரங்களை இரண்டு சம பாகங்களாக ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இடலாம்.எரு மற்றும் ரசாயன உரங்களை தென்னை மரத்தின் அடியில் இருந்து 1.8 மீ. தூரத்தில் வட்டப் பாத்திகளில் இடவேண்டும். மேலும் உரமிடும் போது அவை நன்கு மண்ணில் கலக்க போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு நீரை பாய்ச்ச வேண்டும்.
கீழ்க்கண்ட நுண்ணுயிர் உர பரிந்துரைகளை பின்பற்றலாம். 50 கி. அசோஸ்பைரில்லம் அத்துடன் 50 கி.பாஸ்போ பாக்டீரியா அல்லது 100 கி.அசோக்பாட் உடன் 50 கி.வேர் பூசணத்தை தேவையான அளவு கம்போஸ்ட் அல்லது தொழு உரத்துடன் கலந்து இளம் வேர்களில் படும்படி 6 மாதங்களுக்கு 1 முறை இடவும். தென்னை நார்க்கழிவு அல்லது தென்னை மட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட மண்புழு உரம் மாற்றம் மக்கிய கழிவுகளை இடும் சுழற்சி செய்யலாம்'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.