வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெய்த சாரல் மழையின் காரணமாக தற்போது தேங்காய் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு டன் தேங்காய் ரூ.26 ஆயிரத்துக்கும், ஒரு தேங்காய் ரூ.12-க்கும் விற்பனையாகியது. ஆனால் தற்போது விலை குறைந்து டன் ரூ.22 ஆயிரத்திற்கும். ஒரு தேங்காய் ரூ.9 வரை மட்டுமே விற்பனையாகிறது. தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் தேங்காய் விலை மேலும் குறையும் நிலை உள்ளது.
இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விலை குறைந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெளிமாநில இறக்குமதியை கட்டுப்படுத்தி தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.