முதல் முறையாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது


முதல் முறையாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டதி்ல் அதிகபட்சமாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டதி்ல் அதிகபட்சமாக 1172 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம்போனது.

கொப்பரை தேங்காய்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களான நெல், கொப்பரை தேங்காய், மிளகாய் வத்தல், பருத்தி, நிலக்கடலை போன்றவைகளை சேமித்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய அரசின் சார்பில் சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் இளையான்குடியில் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தற்போது இதில் ஆன்லைன் விற்பனை முறையும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை தங்கள் இடத்திலேயே ஆன்லைனில் பதிவுசெய்து ஆன்லைன் மூலமே விற்பனை செய்யலாம். ஆன்லைனில் பொருளை வாங்கியவர் அதற்குரிய தொகையை வங்கியில் செலுத்திவிட்டு விவசாயிடம் நேரடியாக பொருளை பெற்று செல்வார். இந்த முறையில் விவசாயிக்கு ஏற்று கூலி, இறக்கு கூலி எதுவும் வராது. யார் வேண்டுமானாலும்? எங்கிருந்து வேண்டுமானாலும்? ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

1172 கிலோ

இந்நிலையில் சிங்கம்புணரியில் கொப்பரை தேங்காய் விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மாவட்ட விற்பனைக்குழு செயலாளா் ராஜா தலைமை தாங்கினார். விற்பனைக்குழு மேலாளர் கார்த்திகேயன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாயாண்டி, மேற்பார்வையாளா் மஸ்தான் அலி ஆகியோர் விற்பனை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விளக்கி கூறினர். இந்த ஆன்லைன் ஏலத்தில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், எஸ்.புதூர் கிராமங்களை சேர்ந்த 10 விவசாயிகள் மொத்தம் 1172.650 கிலோ கொப்பரை தேங்காயை ஆன்லைனில் பதிந்து இருந்தனர்.

விற்பனைக்கூடத்தில் இ-நாம் செயலி மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளால் விலை கோரப்பட்டது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.80-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.63-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.85117 விவசாயிகளுக்கு கிடைத்தது. இந்த விற்பனை தொகை விவசாயிகளின் வங்கிகணக்கில் 24 மணி நேரத்தில் வரவு வைக்கப்பட்டது.

அதிக லாபம் பெறலாம்

இது தொடர்பாக செயலாளர் ராஜா கூறியதாவது:- கடந்த 4 மாதமாக ஆன்லைன் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற ஆன்லைன் விற்பனையில்தான் அதிகபட்சமாக கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதுதான் கூடுதல் விலையும் கிடைத்துள்ளது.

விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் தேங்காய் கொப்பரையினை தரம் பிரித்து கொண்டு வரும் பட்சத்தில் தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கும். விவசாயிகள் இ-நாம் செயலியை பயன்படுத்தி ஆன்லைன் மூலம்வர்த்தகம் செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்றார்.


Next Story