கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரம்


கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரம்
x

கொள்ளிடம் பகுதியில் கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மயிலாடுதுறை

கொள்ளிடம் பகுதியில் கோரைப்புல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கோரைப்புல் சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கோரைப்புல் அதிகளவு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கொள்ளிடம் அருகே உள்ள ஓலையாம் புத்தூர், தைக்கால், கீழமாத்தூர், குன்னம், பெரம்பூர், சோதியக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கோரைப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

6 மாத பயிரான கோரைப்புல் தற்போது நன்கு வளர்ந்துள்ளதால் அவற்றை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 6 அடி உயரம் வரை கோரைப்புற்கள் வளரும்.

பக்குவப்படுத்தும் பணி

கொள்ளிடம் பகுதியில் தற்போது கோரைப்புற்களை அறுவடை செய்து, கட்டு கட்டாக கட்டி அதன் மீதுள்ள பூக்களை அகற்றி, இரண்டாக பிளந்து பக்குவப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோரை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோரைப்புற்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோரைப்புற்களை இங்கேயே பதப்படுத்தி விற்பனை செய்கிறோம். இதனை வியாபாரிகள் வாங்கி சென்று வெந்நீரில் சாயம் நனைத்து பல்வேறு வண்ணங்கள் இட்டு பாய் தயாரிக்க அனுப்பி வைக்கிறார்கள்.

தைக்காலில் தயாராகும் பாய்கள்

கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் அதிக அளவில் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. தைக்காலில் பின்னப்படும் பாய்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பாய் ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோரை பாய் உடலுக்கு குளுமையை தருகிறது. எனவே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது பாயை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். பிளாஸ்டிக் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் கோரைப்பாயை பயன்படுத்துவதையும் மக்கள் கைவிடவில்லை.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story