கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் ஊரை காணவில்லை


கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் ஊரை காணவில்லை
x

நெல்லையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் இடிந்தகரை கிராமத்தை காணவில்லை என்று மக்கள் முறையிட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை ஊர் மக்கள், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அதில், ''நாங்கள் காலம் காலமாக மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறோம். இயற்கை சீற்றத்தால் கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுடைய கோரிக்கைகளை அரசுக்கு சொல்வதற்கு வாய்ப்பாக மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த கூட்டம் தற்போது சில மாதங்களாக நடக்கவில்லை. இதனால் எங்களுடைய கோரிக்கைகளை அரசு அதிகாரியிடம் சொல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உடனே மீனவர்கள் குறைதீக்கும் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

வரைபடத்தில் ஊரை காணவில்லை

இடிந்தகரை கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் ஊரை சி.ஆர்.இசட். எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் காணவில்லை. நாங்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிக்கிறோம், ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் வைத்துள்ளோம். எனவே கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தில் இடிந்தகரையை சேர்க்க வேண்டும் என்று முறையிட்டனர்.

சில பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு, அத்திப்பட்டி போல் எங்கள் ஊரும் இல்லாமல் சென்று விட்டது என்று ஆவேசமாக கூறியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழ் சான்றோர் பேரவையினர் வியனரசு தலைமையில் கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் பொருத்தப்பட்டுள்ள ஆங்கில எழுத்து வடிவங்களை உடனே அகற்றி விட்டு, அதை தமிழில் எழுதி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபம் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலப்பாளையம் பகுதி சேர்ந்த பெண்கள் மனு கொடுத்தனர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.


Next Story