வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி :கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வியை படிக்க தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன்படி வெளிநாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கு அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆண்டு வருமானம்
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறியவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை தூய அறிவியல், பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும்.
விரும்பும் நாடுகளில்...
பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம், அவர்கள் விரும்பும் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.