இனப்பெருக்கம் காரணமாக 3 மாத காலமாக மூடல்: வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - விஷம் எடுக்கும் காட்சியை கண்டு ரசித்த பார்வையாளர்கள்
மாமல்லபுரம் அருகே கடந்த 3 மாதமாக மூடப்பட்ட பாம்பு பண்ணை மீ்ண்டும் திறக்கப்பட்ட நிலையில், பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கும் காட்சிகளை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன், கருநாகம், கோதுமை நாகம் உள்ளிட்ட விஷமுள்ள பாம்புகள் அடைக்கப்பட்டு, பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கப்பட்டு வருகிறது. பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350 இருளர் இனத்தவர்கள் அனுமதி சான்று பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்த பண்ணையில் பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மே, ஜூன், ஜூலை என 3 மாதங்கள் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் பாம்பு பிடிக்க தடை விதிக்கப்பட்டு, இந்த பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து தடைக்காலம் முடிந்து பாம்பு பண்ணை தற்போது திறக்கப்பட்டதும் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்கள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கி உள்ளனர்.அப்போது பண்ணையில் விஷம் எடுக்கும் காட்சியை பார்வையாளர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து 3 மாதமாக பாம்பு பிடிக்கும் தொழிலுக்கு செல்லாமல் இருந்த பழங்குடி இருளர்கள் தற்போது வயல்வெளிகள், செடி, கொடிகள் படர்ந்த புதர்கள் உள்ள இடங்களுக்கு சென்று பாம்பு பிடிக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களாக பழங்குடி இருளர்கள் மூலம் பிடித்து வரப்பட்டு, கொடுக்கப்பட்ட மொத்தம் 40 விஷ பாம்புகள் அனைத்தும் மண் பானைகளில் அடைக்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போதுதான் 3 மாத இடைவெளிக்கு பிறகு பாம்பு பண்ணை திறக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு சில தினங்களில் பார்வையாளர்களின் வருகையும் அதிகரிக்கும் என்று பாம்பு பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.