அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா


அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா
x

திருப்பத்தூரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக, பழைய மக்கள் குறைதீர்வு வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி தமிழ்நாடு என்ற அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதன்நிறைவு விழா நேற்று நடந்தது. திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர், சிறப்பாக அரங்குகள் அமைத்த துறைகளுக்கு கேடயங்களும், கலை பண்பாட்டுத் துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்தும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினையும் பார்வையிட்டனர்.

கண்காட்சியை கடந்த 10 நாட்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ், உதவி திட்ட அலுவலர் செல்வம், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், கலைக்குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர்.


Next Story