புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
ரேசன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள் 5 மாத சம்பளம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவை,
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.15,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்தார்.
10 மாதங்கள் பணிபுரிந்தவர்களும் பணியில் சேர்க்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்களுகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதன் மூலம் 1,500 பேர் பயன்பெறுவர். இதுபோன்று, புதுச்சேரியில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்-மந்திரி ரங்கசாமி, இதற்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்தார்.
அதேபோல் 10 கிலோ, 20 கிலோ வெள்ளை அரிசி மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டு, மீண்டும் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றார்.