பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு
பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு
கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசியது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டம்
கும்பகோணம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவுநீரை சேகரிக்க கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பாசனத்திற்கு விடப்படுகிறது. மேலும் மாநகரில் உள்ள கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆள்நுழைவு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குழாயில் அடைப்பு
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சாலையில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் மோதிலால் தெருவிலும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கழிவுநீர் வழிந்து செல்ல வழியின்றி சாலையில் ஆங்காங்கே குளம் தேங்கிவிடுகிறது. இந்த பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள பல தெருக்களில் கழிவுநீர் வழியின்றி ஆள்நுழை குழிகள் வழியாகவும் சாலைகளில் வெளியேறுகிறது.
கழிவுநீர் அதிகமாக வெளியேறுவதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.கழிவுநீரில் மிதித்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலைகளுக்கு வழியாக பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்வோர் வருகின்றனர். இப்படி அதிகஅளவில் மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக குழாயில் அடைப்பை சரி செய்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.