தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தில் ஏறிகடல் அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்
பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் நின்று கடல் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
ராமேசுவரம்
பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் நின்று கடல் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கலங்கரை விளக்கம்
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை. தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் ரூ.8 கோடி நிதியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 50 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வந்த இந்த கலங்கரை விளக்கத்தின் உள்பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று மேல் பகுதியை பார்த்து ரசிக்கும் வகையில் படிக்கட்டுகளும், லிப்ட் வசதிகளும் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்றன.
கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் இந்திய கடல் எல்லை வரையிலும், கலங்கரை விளக்கத்தின் விளக்குகள் வெளிச்சம் தெரியும் வகையில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளும் பொருத்தப்பட்டன. இந்த கலங்கரை விளக்கம் பணிகள் முழுமையாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. பின்னர் கடந்த ஆண்டு மே மாதத்தில் கலங்கரை விளக்கம் மத்திய அமைச்சகத்தால் திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தை மேல் பகுதியில் சென்று பார்வையாளர்கள் பார்ப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கம்பிப்பாடு கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்திற்கு லிப்ட் மற்றும் படிக்கட்டுகள் வழியாகவும் மேலே செல்கின்றனர்.
பின்னர் மேல் பகுதியில் நின்றபடி தனுஷ்கோடி கடற்கரை மற்றும் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சாலையின் அழகையும், கடற்கரை அழகையும் புயலால் அழிந்து போன கட்டிடங்கள் உள்ள இடங்களையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். செல்போனிலும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கட்டணம்
கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு பார்வையாளர்கள் சென்றுவர பெரியவர் ஒருவருக்கு ரூ.10 கட்டணமும், 3 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ. 5 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு ரூ.20-ம், வீடியோ எடுப்பதற்கு ரூ.25 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பகல் 2.30 முதல் 5 மணி வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்கள் பார்க்க அனுமதி கிடையாது. மேலும் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் தனுஷ்கோடி பகுதியில் இருந்து நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று கரை திரும்பும் மீனவர்களுக்கும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது.