மாயமான கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் தாரமங்கலம் அருகே பரபரப்பு
மாயமான கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் தாரமங்கலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
தாரமங்கலம்,
மாயமான கிணறு
தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி பகுதியில் பழைய கிணறு ஒன்று மாயமானது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நெசவு தொழிலாளி சத்தியராஜ் (வயது 32) என்பவர், அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறினார். திடீரென கிணற்றை மீட்க வேண்டும் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாசில்தார் வல்ல முனியப்பன், இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி சத்தியராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபரை சாதுர்யமாக பேசி கீழே இறங்கி வர செய்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.