தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் பேரூராட்சியில் 40-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களான தெற்கு பூலாங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த இசக்கி முத்து (வயது 23), ஆலங்குளத்தை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகியோர், வீடுகளில் சேகரித்த குப்பைகளை வண்டியில் ஆலங்குளம் புதுப்பட்டி சாலையில் உள்ள ஓரிடத்தில் கொட்டுவதற்காக சென்றனர். அப்போது அங்கு முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், தூய்மை பணியாளர்களிடம் இங்கு குப்பைகளை கொட்டும்படி கூறியது யார்? என்று கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி, 2 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் தூய்மை பணியாளர்கள் திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் புலிகள் கட்சியின் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் தமிழ் குமார், கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் பாலு ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் கொடுக்கும் படி கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி மோகன்லால் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.


Next Story