தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அரசாணை

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை எண் 152-ஐ வெளியிட்டிருந்தது. அதன்படி இனி ஓய்வு பெறும் தூய்மை பணியாளர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்பக்கூடாது. ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பணியாளர்களை பாதிக்கும் இந்த அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும், தினக்கூலியாக ரூ.480 முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

தர்ணா போராட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கணக்கர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சுயஉதவிக்குழு மூலமாக...

இதுகுறித்து மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில், 'நெல்லை மாநகராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 740 தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அவர்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்ற வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை கைவிட வேண்டும். அவ்வாறு ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் சுயஉதவிக்குழு மூலமாகவே தூய்மை பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story