போலீஸ் நிலையம்- அலுவலகத்தில் தூய்மை பணி; சூப்பிரண்டு பார்வையிட்டார்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் நிலையம்- அலுவலகத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதனை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள், ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு மாதம் 2-வது சனிக்கிழமையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் போலீசார் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்த தூய்மைபடுத்தும் பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், "நமது வீட்டை நாம் சுத்தமாக வைத்திருந்தாலே நமது சுற்றுபுறங்களும் தூய்மையாகிவிடும். அதேபோல் நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சுற்றுப்புறங்களில் மரங்கள் வளர்க்க வேண்டும். பிரச்சினைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு தீர்வு என்பது தற்கொலை அல்ல. பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மன தையரியத்தோடு அணுக வேண்டும். தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எண்ணம்போல் வாழ்க்கை. எனவே நீங்கள் நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு நன்மைகளை செய்ய வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.