தூய்மை சேவை திட்ட பணிகள்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
நெல்லை அருகே தூய்மை சேவை திட்ட பணியை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் முழுவதும் நேற்று தூய்மைப்பணிகள் நடந்தது. இதில் அந்தந்த ஊராட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அருகில் உள்ள நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், யூனியன் தலைவர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், பொதுமக்களுக்கு மஞ்சபைகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டினார். இதில் பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், பாலசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், செயலர் சுப்புகுட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை மாநகராட்சியிலும் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக காலையில் தூய்மை பணிகள் நடை பெற்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் பாளையங்கோட்டை கோர்ட்டு அருகே உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஒண்டிவீரன் மணி மண்டப வளாகத்தில் நடந்த தூய்மை பணியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.