திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதலில் 9-ம் வகுப்பு மாணவன் பலி


திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதலில்  9-ம் வகுப்பு மாணவன் பலி
x

அரசு பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

மாணவர்கள் மோதல்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஸ் நிறுத்தம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள வகுப்புகளில் சுமார் 916 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 9-வது வகுப்பில் படித்த மாணவன் ஆரணி சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 14). நேற்று மதியம் 2 மணி அளவில் அதே வகுப்பறையில் படிக்கும் மற்றொரு மாணவன் தமிழ்செல்வனை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வகுப்பறைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

பலி

அப்போது தமிழ்ச்செல்வன் திடீரென மயங்கி கீழே விழுந்தான். இதனைக் கண்ட சக மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே தலைமை ஆசிரியர் முருகன் மாணவன் தமிழ்ச்செல்வனை ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளி தரப்பில் மாணவனின் பெற்றோருக்கும், ஆரணி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார், ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும் போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி உமா மகேஸ்வரி வகுப்பறையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் இறந்தது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story