மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவி சாவு
ராட்சத அலையில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
கடலில் குளித்தார்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த அத்திபலே நகரத்தை சேர்ந்தவர்கள் ஒரு பஸ்சில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை சென்றனர். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு மாமல்லபுரம் கடலில் குளித்தனர்.
இந்த நிலையில் அத்திபலே பகுதியை சேர்ந்த சுமிதா (வயது 15) என்பவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து கடலில் மகிழச்சியாக குளித்து கொண்டிருந்தார்.
உடல் கரை ஒதுங்கியது
அப்போது கடல் பலத்த சீற்றமாக இருந்தால் ராட்சத அலையில் சிக்கி சுமிதா கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். பிறகு தங்கள் கண் முன்னே மகள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டதை கண்டு அவரது பெற்றோர் அங்கு இருந்தவர்கள் இதுகுறித்து மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து மாமல்லபுரம் கடலில் ரப்பர் மிதவை உதவியுடன் கடலில் நீந்தி சென்று சுமிதாவை தேடினர்.
எங்கு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அவரது உடல் மாமல்லபுரம் தெற்கு பக்க கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுமிதா அத்திபலே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தங்களுடன் வந்த பள்ளி மாணவி கடலில் மூழ்கி இறந்ததையடுத்து அத்திபலே பக்தர்கள் அனைவரும் மற்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு சோகமாக சொந்த ஊர் திரும்பியதை காண முடிந்தது.