நாவலூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
நாவலூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 11). இவர், மாமல்லபுரம் சாலை நாவலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளிக்கு அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.
நேற்று காலை வழக்கம் போல செம்மஞ்சேரியில் இருந்து அரசு பஸ்சில் நாவலூர் வந்து கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சர்வீஸ் சாலையில் வேகமாக சென்ற தனியார் தண்ணீர் லாரி, மாணவன் ஹரிஹரன் மீது மோதியது. இதில் ஹரிஹரன், தண்ணீர் லாரியின் முன்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த பள்ளி மாணவன் ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மதன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.