கரூர் அருகே திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்: கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு


கரூர் அருகே  திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்: கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு
x

கரூர் அருகே திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்

இருதரப்பினர் மோதல்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே மேலபகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன்-பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா கடந்த 6-ந்தேதி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் வழிபாடு செய்வதற்காக முன் மண்டபத்திற்கு வந்துள்ளார். இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் தாசில்தார் முனிராஜ், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், மேல பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது திருவிழா தொடங்கியதால், விழாவை பாதியில் நிறுத்த வேண்டாம், இரு தரப்பினரும் கோவிலுக்கு வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்து திருவிழாவை முடித்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மோதல் ஏற்படும் சூழல்

இதற்கிடையில் நேற்று காலை கோவிலில் இருந்து கரகம் எடுத்து விடும் நிகழ்ச்சி நடத்துவதற்தாக குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தாசில்தார் முனீஸ்வரன் ஆகியோர் கோவிலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் கரகத்தை கோவிலுக்குள் சென்று எடுத்து வந்து கிணற்றில் கரைத்து விட்டனர்.இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எங்களையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் மற்றொரு தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

பதற்றம்

இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் கோவிலில் உள்ள 4 கதவுகளையும் பூட்டி சீல் வைத்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து எப்படி கோவிலுக்கு சீல் வைக்கலாம் என கூறியும், கோவிலை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோட்டாட்சியர் புஷ்பாதேவியின் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் எதிரொலியாக அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டாட்சியர் வேன் மோதி சிறுமி படுகாயம்

போராட்டகாரர்களிடம் சிக்கிய கோட்டாட்சியர் புஷ்பாதேவியை மீட்பதற்காக கரூரில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்து கோட்டாட்சியரை மீட்டு அவரது வேனில் ஏற்றி கொண்டு புறப்பட்டனர். அப்போது அவர்களை செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருச்சி-பாளையம் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு சாலையை மறித்தனர்.

இதையடுத்து பின்னால் திரும்பியபோது, பொதுமக்கள் அந்த வேனை சூழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வேனின் அருகே நின்றுகொண்டு இருந்த பாலதாரணி(வயது 17) என்ற சிறுமியின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுமியின் காலில் வேனின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் சிறுமியின் கால் முறிந்து படுகாயம் அடைந்தார். ஆனால் வேன் நிற்காமல் சென்றுவிட்டது.

இதையடுத்து பொதுமக்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் வீரம்பட்டியில் உள்ள திருச்சி-பாளையம் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் அமர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


Next Story