திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

மேம்பாலம் கட்டும் பணி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் நெமிலி- என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம், கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் தற்காலிக தரைப்பாலம் அமைத்து வாகன போக்குவரத்து நடைபெற்றது.

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் முற்றுகை

தற்போது இறுதிக்கட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக தரைப்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரைபாலம் வழியாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேம்பாலம் பணிகள் நடைபெறும் பகுதி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆகிரமிப்பு செய்துள்ளார் அதனை மீட்டு அந்த வழியாக வாகனங்கள் செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பரபரப்பு

இதனையடுத்து, அந்த இடத்தில் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. ஹசரத்பேகம் உத்தரவின் பேரில், தாசில்தார் விஜயதாரணி மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் நில அளவீடு செய்தனர். இதில் அந்த இடம் அரசுக்கு சோந்தமான புறம்போக்கு இடம் என தெரிய வந்தது. ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய் துறையினர் மீட்டு பொதுமக்களின் வாகன போக்குவரத்துக்கு பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரபு நிலவியது.


Next Story