கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்


கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்
x

கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருச்சி

மணிகண்டம்:

மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குளம் கிராமத்தில் சுமார் 87 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளம் செங்குளம், பள்ளப்பட்டி, யாகப்புடையான்பட்டி, குஜிலியம்பட்டி ஆகிய ஊர்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக உள்ளது.

இந்த குளத்தில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்காக மண் அள்ளினர். அப்போது அதிக கொள்ளளவு கொண்ட டிப்பர் லாரிகளில் கிராவல் மண் அள்ளிச்சென்றதால் செங்குளத்தில் இருந்து சேதுராப்பட்டிக்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்து, மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, மண் அள்ள அனுமதி அளித்தனர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை. மேலும் தற்போது மீண்டும் மண் அள்ள டிப்பர் லாரிகள் வந்தன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சாலையை சீரமைக்கக்கோரி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்து, மண் அள்ளவிடாமல் தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமார், மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிக்கு அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளி செல்வதாகவும், அப்பணி முடிந்தவுடன் சேதமடைந்த சாலையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து லாரிகளை விடுவித்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று அளுந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story