போலி மருத்துவ முகாம் நடத்தியதாக 4 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்


போலி மருத்துவ முகாம் நடத்தியதாக 4 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்
x

போலி மருத்துவ முகாம் நடத்தியதாக 4 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்

தஞ்சாவூர்

திருப்பனந்தாள் அருகே போலி மருத்துவ முகாம் நடத்தியதாக கூறி 4 பேரை சிறைபிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்

மருத்துவ முகாம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மகாராஜபுரத்தில் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற 4 நபர்கள், நாங்கள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.

உங்களது கிராமத்திலும் மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். இதில் குறைந்த அளவு பணம் செலுத்தினால் சிகிச்சை அளிக்கப்படும் என்று அந்த பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய 80 குடும்பத்தினருக்கு 2 நாட்களுக்கு முன்பு டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர்.

குறைந்த செலவில் பரிசோதனை

அவர்கள் கூறியது போல் அந்த 4 பேரும் நேற்று ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு ஊராட்சி மன்ற தலைவரும் அனுமதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.

இந்த முகாமில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை நடத்தி உள்ளனர். அப்போது ஒரு சிலரிடம் உங்களுக்கு சி.டி. ஸ்கேன், ரத்த பரிசோதனை ஆகியவை எடுக்க வேண்டி உள்ளது. இந்த பரிேசாதனையை வெளியே செய்தால் அதிகம் செலவு ஆகும். எங்களிடம் குறைந்த செலவில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதை நம்பிய சிலர், அவர்களிடம் பரிசோதனை செய்ய பணம் செலுத்தி உள்ளனர்.

மயங்கி விழுந்த பெண்

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிட்ட ரமணி என்ற பெண் தனது வீட்டுக்கு சென்றதும் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவ முகாம் நடந்த இடத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களிடம் என்ன மாத்திரை கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளனர்.

சிறைபிடித்த பொதுமக்கள்

மருத்துவ முகாம் நடத்தியவர்கள் சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபர்களிடம் நீங்கள் உண்மையிேலயே டாக்டர்கள் தானா?, உங்களது சான்றிதழை காண்பியுங்கள் என்று கேட்டு அவர்களை முகாம் நடந்த பள்ளியிலேயே சிறைபிடித்து வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து சோழபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

பின்னர் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மக்களுக்கு என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்றும் அவர்கள் உண்மையான டாக்டர்கள் தானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர்கள் என கூறி போலி மருத்துவ முகாம் நடத்தியதால் அவர்களிடம் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story