ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வாய்க்கால் அமைக்கும் பணிஅதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் கோண்டூரில் இருந்து நெல்லிக்குப்பம் வழியாக மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பம் பகுதிக்குட்பட்ட சில இடங்களில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
அந்த வகையில் நேற்று நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள், அதிகாரிகளிடம் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், ஒருதலை பட்சமாகவும் ஆக்கிரமிப்புகளை சரியான முறையில் அகற்றாமல் வாய்க்கால் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உரிய முறையில் சாலையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி பணியை மேற்கொள்ளவேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இருப்பினும் அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தரப்பில் இப்பிரச்சினை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.