ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்; கல்வீச்சில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் கல்வீச்சில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது.

திருச்சி

லால்குடி:

ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவுக்கு உட்பட்ட 105 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இடையாற்றுமங்கலம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கினர். இப்பகுதியிலும் விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அன்பில், ஜங்கம்மராஜபுரம், மங்கம்மாள்புரம், அரியூர், செங்கரையூர், கல்விக்குடி உள்பட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நேற்று அன்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

மறியல்-தள்ளுமுள்ளு

இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஏற்கனவே 7 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அன்பில் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்றும், எனவே புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 500-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் மீது கல் வீசப்பட்டதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.இது பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இ்ந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story