பொதுமக்கள் மறியல் போராட்டம்


பொதுமக்கள் மறியல் போராட்டம்
x

பரமத்திவேலூர் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை சீரமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

தார் சாலை

பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைமேடு பகுதியில் உள்ள மங்கலமேட்டில் புதிதாக சாலை அமைக்க ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை பெயர்த்து எடுத்தனர். இந்தநிலையில் சாலையில்ஜல்லி கற்களை கொட்டி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தார் சாலை போடாததால் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்து கீழே விழுவதும், காயம் ஏற்படுவதும் தொடர்ந்து வழக்கமாகி வருகிறது. மேலும் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களில் வாகனங்கள் செல்லும்போது காற்றில் புழுதி பறந்து மாசு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த சாலையில் குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்ட குழிகளையும் ஓலப்பாளையம் ஊராட்சியினர் சரிவர மூடவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்களே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி குழிகளை மூடி விட்டனர்.

சாலை மறியல்

இது குறித்து ஓலப்பாளையம் ஊராட்சியில் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மங்கலமேடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகு மயில்சாமி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story