திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்


திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
x

திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்க விழாவில் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னை

போலீஸ்துறையின் 3-வது கண் என்றழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் சென்னை நகரம் முழுவதும் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 43 இடங்களில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் புதிதாக 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சென்னை எழும்பூர் போலீஸ் மெஸ் அருகே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கேமராக்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த கேமராக்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் மிகவும் தரமாக இருக்கும். கேமராக்கள் இயங்கவில்லை என்றாலோ, சேதப்படுத்தப்பட்டாலோ தானியங்கி மூலம் 'இ-மெயில்' முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதி உள்ளது. கண்காணிப்பு காட்சிகளை பதிவேற்றம் செய்யும் வகையில் இந்த கேமராக்களில் 'வை-பை' வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்க விழாவில், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர்கள் திஷா மிட்டல், சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story