முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விடுவதா? -நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி


முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விடுவதா? -நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விட்டது ஏன் என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி

முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விட்டது ஏன் என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

நகர்மன்ற கூட்டம்

பரமக்குடி நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:

கவுன்சிலர் வடமலையான்: 36-வது வார்டு சி.எஸ்.எம். போர்டிங் சாலையில் உள்ள சமுதாய கழிப்பறை ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதற்குள் மீண்டும் அதே பணிக்கு ரூ.9 லட்சத்தில் டெண்டர் விடுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மீராஅலி (பொறியாளர்): பிரிண்டிங் தவறால் அது நடந்துள்ளது. ஜி.வி.பந்த் தெருவிற்கு பதிலாக அவ்வாறு வந்துள்ளது.

கவுன்சிலர் மோகன்: 36-வது வார்டில் வாருகால் அள்ளுவதே இல்லை. சுகாதார பிரிவில் கேட்டால் மாஸ் பணி நடைபெறுகிறது என்று சொல்லி ஒரே இடத்தில் அனைவரும் வேலை செய்கின்றனர். இதை அனைத்து வார்டுகளிலும் செய்ய வேண்டும். முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விட்டது ஏன்?

ஜெயராமன் (சுகாதார அலுவலர்) : ஒவ்வொரு வார்டாக செய்து வருகிறோம்.

நாய்கள் ெதால்லை

கவுன்சிலர் சதீஷ்குமார் : முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா தொடங்கப்பட உள்ளது. இந்த திருவிழாவுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணி உள்பட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

சேது கருணாநிதி (தலைவர்): பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படும்.

கவுன்சிலர் கவிதா: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரட்டி கடிக்கிறது. தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்து ஆங்காங்கே படுத்து கொள்கிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது.

சேது கருணாநிதி(தலைவர்): நாய்களை கொல்ல முடியாது. கருத்தடை தான் செய்ய முடியும். விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விட்டது ஏன் என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

கவுன்சிலர் வடமலையான்: நகராட்சி ஆணையாளர் தேவகோட்டை நகராட்சிக்கும் பொறுப்பு வகிப்பதால் பணிகள் நடைபெறுவதில் குளறுபடி ஏற்படுகிறது.

திருமால் செல்வம் (ஆணையாளர்): பரமக்குடி நகராட்சிக்குதான் நான் நிரந்தர ஆணையாளர். தேவகோட்டை நகராட்சிக்கு பொறுப்பு ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன். ஆனாலும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

சேது கருணாநிதி (தலைவர்):பரமக்குடி நகராட்சிக்கு வரவேண்டிய வரிப்பாக்கிகள் ரூ.4 கோடிக்கு மேல் உள்ளது. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் பகுதி மக்களிடம் சொல்லி நகராட்சிக்கு வரியை செலுத்த நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து கவுன்சிலர்கள் குறைகளை, கோரிக்கைகளையும் தெரிவித்து பேசினர்.


Next Story