நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு


நகரமன்ற கூட்டத்தில்    கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்    நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
x

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு 2022-23 சட்டமன்ற தொகுதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்த வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:- கவுன்சிலர் இக்பால்:-

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 7 இடங்களில் சிறிய உயர்மின் விளக்கு அமைப்பதற்கு யாரிடம் தெரிவித்தீர்கள். இது போன்ற திட்டம் வந்துள்ளது எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் எப்படி திட்டத்தை செயல் படுத்தினீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது கவுன்சிலர்கள் ஹேமாவதி, சரவணன், ஸ்ரீதர் ஆகியோர் எங்களிடம் முறைப்படி அதிகாரிகள் தெரிவித்து, அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்றனர்.

கவுன்சிலர்கள் புனிதவதி, இக்பால், முத்தமிழன், சத்யா ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி கேட்கிறோம். அவர்கள் பதில் கூற வேண்டும் என்றனர்.

கூச்சல், குழப்பம்

அதற்கு கவுன்சிலர்கள் ஹேமாவதி, சரவணன், ஸ்ரீதர் ஆகியோர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்புங்கள். எங்கள் வார்டு பகுதியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? என கேட்டதால், கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கவுன்சிலர் இக்பால்:- நகர மன்ற கூட்டத்தில் வெளிநபர்கள் உள்ளே அமர்ந்துள்ளனர். இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தனர்? என கேட்டதால் அங்கு கடும் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்- அந்தந்த கவுன்சிலர்கள் அவரவர்கள் கோரிக்கைகள் குறித்து மட்டும் பேச வேண்டும். அமைதியாக இருங்கள் என கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே கவுன்சிலர்கள் சத்யா, புனிதவதி மற்றும் ஒரு சில கவுன்சிலர்கள் திடீரென்று எழுந்து வெளியில் சென்றனர்.

இதுகுறித்து நகரமன்ற தலைவர் கூறுகையில், கவுன்சிலர்கள் கோரிக்கையின்பேரில் தீர்மானம் வாசித்து முடித்த பிறகு பொது பிரச்சினைகள் தொடர்பாக பேசலாம் என அனுமதி கொடுத்த நிலையில் பல கவுன்சிலர்கள் எழுந்து பாதியில் வெளியில் சென்றது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அடுத்த கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றார். இதையடுத்து கூட்டம் முடிவடைந்தது. நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story