குளித்தலை நகராட்சியில் நகர பகுதி சபா கூட்டம்
குளித்தலை நகராட்சியில் நகர பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது உண்டு. இந்த நிலையில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம பகுதிகளை போன்று நகரப் பகுதிகளிலும் நகர சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி குளித்தலை நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வரை அனைத்து வார்டு பகுதிகளிலும் பகுதி சபா கூட்டங்கள் தொடர்ந்து நடந்தன. குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டுக்கான பகுதி சபா கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள நுண் உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். நகர்ப்புற சுகாதார மையத்தில் பெண் மருத்துவரை பணியமர்த்த வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கையை எடுப்பதாக நகர் மன்ற தலைவர் சகுந்தலாபல்லவிராஜா தெரிவித்தார்.