சாலையில் சரக்கு வேன், ஆட்டோக்களை நிறுத்தி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம்
சாலையில் சரக்கு வேன், ஆட்டோக்களை நிறுத்தி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாடுமுழுவதும் 15 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 72 இடங்களில் இன்று பகல் 12 மணி முதல் பகல் 12.15 மணி வரை வாகனங்களை ஆங்காங்கே சாலையின் நடுவே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது சரக்கு வேன்கள், ஆட்டோக்களை பஸ் நிலையத்தை சுற்றி சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள், கார்கள், வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்படைந்தது. கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தினால் 15 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.