பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மோரணம் அருகே செய்யாறு- ஆற்காடு சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு
மோரணம் அருகே செய்யாறு- ஆற்காடு சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு நிலம்
வெம்பாக்கம் தாலுகா மோரணம் கிராமம் ஏ காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சுமார் 25 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் 7 பேர் வீடு கட்டி பல வருடங்களாக வசித்து வருவதாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிராம மக்கள் சார்பில் கோவிலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதன் பின்னர் அங்கு வசித்து வந்த 6 பேரை வெளியேற்றிய நிலையில் கோவிலைச் சுற்றி வேலி அமைத்தனர்.
சாலை மறியல்
அங்கு வசித்து வந்த அமாவாசை என்பவர் அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் கோவிலை சுற்றி கிராம மக்கள் அமைத்த வேலியை தகர்த்தெறிந்து சேதப்படுத்தி உள்ளார்.
சுற்றுவேலியை தகர்த்தெறிந்து சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு செய்யாறு -ஆற்காடு சாலையில் மோரணம் போலீஸ் நிலையம் எதிரே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த செய்யாறு இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
60 பேர் மீது வழக்கு
இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சந்திரன் உள்பட 25 ஆண்கள், 35 பெண்கள் என மொத்தம் 60 பேர் மீது மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.