சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து ஏலம் விட்டதால் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து ஏலம் விட்டதால் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உரிமையாளர்களுக்கு அபராதம்
ஆவடி பகுதியில் சி.டி.எச். சாலை, ஆவடி-பூந்தமல்லி சாலை, புதிய ராணுவ சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, மாடுகள் முட்டி விபத்தில் சிக்கி பலர் உயிரிழக்கின்றனர்.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அவற்றை மாநகராட்சி சார்பில் பவுண்டில் வைக்கப்படும். 7 நாட்களுக்குள் அதன் உரிமையாளர்கள் பெரிய மாடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், கன்று குட்டிகளுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்டு செல்ல வேண்டும். இ்ல்லாவிட்டால் 7 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட மாடுகள் ஏலம் விடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆவடி மாநகராட்சி கமிஷனர், அது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
மாடுகள் ஏலம்
அதன்படி கடந்த சில நாட்களாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பவுண்டில் வைத்தனர். மாடுகளின் உரிமையாளர்கள், அபராதம் கட்டி மாட்டை மீட்டு செல்கின்றனர்.இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சாலையில் சுற்றித்திரிந்த 10 மாடுகளை ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அதில் 4 மாடுகளை அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மீட்டு சென்றனர். மீதம் இருந்த 5 பசு மாடுகள், ஒரு கன்றுகுட்டியை அதன் உரிமையாளர்கள் மீட்டு செல்லாததால் அவற்றை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் ஏலம் விட்டனர்.
அவற்றில் 2 பசு மாடுகள் சினையாக இருந்ததாக கூறப்படுகிறது. மாட்டை அறுத்து இறைச்சிக்காக விற்பனை செய்பவர்கள்தான் இந்த மாடுகளை ஏலத்தில் எடுத்து சென்றதாக தெரிகிறது.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
பிடிபட்டு 7 நாட்களுக்குள் உரிமையாளர்கள் வராவிட்டால் மாடுகளை ஏலம் விடுவதாக கூறிவிட்டு, பிடிபட்ட 2 நாட்களில் மாடுகளை ஏலம் விட்டதை அறிந்த கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மீது திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர்.ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்ததால், ஆவடி மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாட்டை ஏலம் எடுத்தவர்களிடம் பணத்தை கட்டி மாட்டை அதன் உரிமையாளர்கள் மீட்டுக்கொள்ள கால அவகாசம் கேட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.