ஏரி, குளங்களில் பொதுமக்கள் வண்டல் மண் எடுக்கலாம்
ஏரி, குளங்களில் பொதுமக்கள் வண்டல் மண் எடுக்கலாம்.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் படி அரியலூர் மாவட்டத்தில் நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் 92 ஏரிகள் (ஒரு நீர்த்தேக்கம் உள்பட) மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 454 குளம், ஏரிகள் உள்ளது. இந்த ஏரி, குளங்களில் வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை வேளாண் உபயோகம், சொந்த வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் ஆகிய காரியங்களுக்காக இலவசமாக எடுத்து செல்லும் பொருட்டு, நடப்பாண்டிற்கு அரியலூர் மாவட்ட அரசிதழ்களில் அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து 546 ஏரி, குளங்கள் விவரம் அடங்கிய அரசிதழ்கள் அனைத்து வருவாய் தாசில்தார் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, வண்டல் மண் இலவசமாக எடுத்து கொள்வதற்கு கடந்த மே மாதம் 11-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மூலம் அனுமதி வழங்கிட உத்தரவிடப்பட்டது.
இதன் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் அரசிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள ஏரி, குளங்களில், 171 ஏரி, குளங்களில் மட்டும் 1,09,158 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள மொத்தம் 830 விவசாயிகளுக்கு ஏற்கனவே சம்மந்தப்பட்ட தாசில்தாரர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட அரசிதழ்களில் வெளியிடப்பட்ட ஏரிகளில், நீர் நிரம்பிய, நிரம்பி வரும் மற்றும் வண்டல் மண் முற்றிலும் எடுக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் தவிர்த்து, மற்ற ஏரி, குளங்களில் வண்டல் மண்ட எடுத்து கொள்வதற்கு, வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாசில்தாரர்களால் அனுமதி வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக வண்டல் மண் எடுத்து பயனடையலாம்.
இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.