குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை அயனாவரம், புது நகர் 2-வது தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 2 அடிப்பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் பழுதடைந்து இருப்பதால் கடந்த சில மாதங்களாக இதில் தண்ணீர் வருவதில்லை.
மேலும் இங்குள்ள குடியிருப்புகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் அண்ணா நகர் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று காலை அயனாவரம் வாட்டர் டேங்க் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மண்டல அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் கூறியதால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.