பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
தியாகதுருகம் அருகே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள ஓடையை அதே பகுதியை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஒகையூரை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் உள்ள விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓடை ஆக்கிரமிப்புகளை உடனேஅகற்ற வேண்டும் என கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள், வருகிற 28-ந்தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரபப்பு ஏற்பட்டது.