வங்கிகளுக்கு பணத்தை கொண்டு போக முடியவில்லை.. தேர்தல் ஆணையத்திற்கு பெட்ரோலியம் டீலர்கள் கடிதம்
பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக, டெபாசிட் சலான்களுடன் சேர்த்து எடுத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய பெட்ரோலியம் டீலர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் உதய் லோத் மற்றும் பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சில்லறை வணிகத்தில் 50 சதவீத பரிவர்த்தனை ரொக்கமாக நடைபெறுகிறது. தினமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூலாகிறது. இந்த தொகையை நாங்கள் தினமும் வங்கிக்கும், இரவில் வீடுகளுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக கொண்டு செல்கிறோம்.
இவ்வாறு எங்கள் டீலர்கள் வங்கிக்கு பணத்துடன் செல்லும்போது தேர்தல் குழுவினரால் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலையிட்டு, கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அந்தந்த வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக, டெபாசிட் சலான்களுடன் சேர்த்து எடுத்துச் செல்ல அனுமதிக்கவேண்டும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
பணத்தை பறிமுதல் செய்வதில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கவேண்டும். பணத்தை வங்கிகளில் உரிய நேரத்தில் டெபாசிட் செய்யாவிட்டால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் எங்களின் விநியோகங்கள் தடுக்கப்படும். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் இல்லாமல் வறண்டு போவதுடன் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.