இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை; திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை; திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் வகையில் தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாளில் கல்லறையில் இருந்து உடலுடன் உயிர்த்து எழுந்தார். இது ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று இரவு ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பிரார்த்தனை நடந்தது.

திருப்பலி

பாஸ்கா திரு விழிப்பு சிறப்பு ஆராதனை நிகழ்வுகள் தொடங்கின. உலக தொடக்கம், இஸ்ரவேல் மக்கள் செங்கடல் கடந்தது உள்ளிட்ட விவிலிய (பைபிள்) வரலாற்று நிழ்வுகள் நினைவுகூரப்பட்டு பிரார்த்தனைகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் வரையான நிகழ்வுகள் தியானிக்கப்பட்டன. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் திருமுழுக்கு புதுப்பித்தல், தண்ணீர் மந்திரிப்பு, மெழுகுவர்த்தி (நெருப்பு) மந்திரிப்பு ஆகியவை நடந்தன.

தொடர்ந்து பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு (ஈஸ்டர்) கொண்டாட்ட சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்கள். இயேசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிர்த்து எழும் காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு ஆராதனை

இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சிறப்பு ஆராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன.

இதுபோல் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.


Next Story