ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு வழிபாடு- குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் குடில் அமைக்கப்பட்டது


ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு வழிபாடு நடந்தது. குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் குடில் அமைக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு வழிபாடு நடந்தது. குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் குடில் அமைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் விழா கிறிஸ்துமஸ் பண்டிகையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நேற்று இரவு புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் மாதாவின் வயிற்றில் இருந்து பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான்சேவியர், உதவி பங்குத்தந்தை நல்லஜேக்கப்தாஸ் ஆகியோர் பிறந்த குழந்தை இயேசு சிலையை பவனியாக எடுத்து வந்து குடிலில் வைத்தனர். தொடர்ந்து திருப்பலி (பூஜை) நடந்தது. இந்த வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு வழிபாடுகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அமல அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருப்பலி முடிந்ததும் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதுபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடக்கிறது. பண்டிகையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் வண்ண விளக்கு அலங்காரம் மிக அழகாக செய்யப்பட்டு இருந்தது. பார்க்கும் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகளை ஏராளமானவர்கள் வந்து பார்த்து சென்றனர்.


Next Story