கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்


கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
x

பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நெல்லையில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்றார்

திருநெல்வேலி

பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நெல்லையில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்றார்.

கிறிஸ்துமஸ் விழா

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த குருவானவர் ஸ்டீபன் லயனல் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன், மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், உதயகுமார், வட்டார தலைவர் பாக்கியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விக்கிரமசிங்கபுரம்

அடையகருங்குளம் அன்னை ஜோதி சேவா டிரஸ்ட்டில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அன்னை ஜோதி சேவா சிறப்பு பள்ளியில் நேற்று நடந்த விழாவுக்கு மயோபதி காப்பக உரிமையாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாஞ்சோலை ராதாகிருஷ்ணன், கோகிலா அம்மாள், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளியின் செயலாளர் செல்வகுமார் வாழ்த்தி பேசினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் நிர்வாகி ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி

நெல்லை தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. மழலையர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் போன்று வேடமணிந்து இயேசு கிறிஸ்து பற்றிய செய்திகளை நாடகங்களாக நடித்து காட்டினர். பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள கதீட்ரல் ஆலயத்துக்கு சென்றனர். அங்கு பாஸ்டர்கள் பாஸ்கர் கருமராஜ், ஸ்டீபன் ஆகியோர் மழலை கிறிஸ்துமஸ் தாத்தாக்களுக்கு செய்தி வழங்கினர். விழாவில் பள்ளி தாளாளர் துரைசாமி, முதல்வர் இன்னோஷ் சிபி., மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவஞானம் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளி

அம்பை வேல்ஸ் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அருட்தந்தை அருள் அம்புரோஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கிறிஸ்துமஸ் கீதங்கள் போட்டியானது மாணவ-மாணவிகளுக்கிடையே நடைபெற்றது. அருட்சகோதரர் சுனில் பென்ஜமின் மற்றும் அருட்சகோதரர் வின்சண்ட் பால் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை அறிவித்தனர். மேலும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் மற்றும் நடன கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜராஜேஸ்வரி, முதல்வர் சக்திவேல் முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியின் சார்பில் பாளையங்கோட்டை பிஷப் சார்ெஜண்ட் அன்பு இல்லத்தில் நடந்த விழாவுக்கு, பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ் தலைமை தாங்கினார். இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி மாணவ-மாணவிகள் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட உதவி பொருட்களை வழங்கினா். பிரிட்ஜ், கியாஸ் அடுப்பு, மிக்சி மற்றும் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதேபோன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் மேயர் சரவணன் முன்னிலையில் புத்தாடைகள் வழங்கினர். பாளையங்கோட்டை சாலோம் முதியோர் இல்லத்திலும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர் சுகந்தி சொர்ணலதா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர்.

கெயின்ஸ் பள்ளி

வள்ளியூர் கெய்ன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. போதகர் லூக் ஐசக் தலைமை தாங்கினார். மோனிகா ஐசக் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் செல்வவிநாயகம், மெட்ரிக் பள்ளி தாளாளர் வசந்தா செல்வவிநாயகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அட்லின் மஹிமா, ஆன்ட்ரூ ஜெய்சன் ஆகியோர் சாண்டாகிளாஸ் முன்னிலையில் மாணவ-மாணவிகள், பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கினர்.

பாலாஜி கல்வி நிறுவனம்

சேரன்மாதேவி ஸ்ரீபாலாஜி கல்வி நிறுவனத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. செவல் சேகர போதகர் ஸ்டார்லின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி தாளாளர் கமலா ராமச்சந்திரன், இயக்குனர் ரஞ்சித் ராமச்சந்திரன், செயலாளர் தினேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story