கிறிஸ்துமஸ் கீத பவனி
ஊட்டியில் கடுங்குளிரிலும் வீடு, வீடாக சென்று கிறிஸ்துமஸ் கீத பவனி நடந்து வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் பாடல் பாடி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டியில் கடுங்குளிரிலும் வீடு, வீடாக சென்று கிறிஸ்துமஸ் கீத பவனி நடந்து வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் பாடல் பாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் திருச்சபைகள் சார்பில், கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பவனி ஊட்டியில் நடைபெறாமல் இருந்தது.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி தொடங்கியது. நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் அனுமதியின் பேரில், பங்கு தந்தை ஸ்டனீஸ், உதவி பங்கு தந்தை அபிஷேக் ரிசாரியோ ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
கடுங்குளிர்
இந்த ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். பங்கு மக்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இளைஞர்கள் 25 பேர் குழுவாக சென்று, இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து வருகின்றனர். அப்போது ஹார்மோனியம், மத்தளம் உள்ளிட்ட இசை கருவிகளை இசைத்து பாடல் பாடி உற்சாகமாக நற்செய்தியை அறிவித்து வருகின்றனர். தினமும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் பூபால பாடல் நிகழ்ச்சி இரவு 11.30 மணி வரை நடைபெறுகிறது.
ஊட்டியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், கையில் குழந்தை இயேசு சொரூபத்தை எடுத்துக்கொண்டு வீடுகளில் வைத்து ஜெபம் செய்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். குளிரை போக்க கம்பளி ஆடைகளை அணிந்து செல்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து இனிப்புகளை வழங்கியும் வருகின்றனர். இந்த நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் ஊட்டி தூய திரித்துவ ஆலயம், புனித தாமஸ் ஆலயம் சார்பிலும் கிறிஸ்துமஸ் கீத பவனி நடந்து வருகிறது.
ஊட்டி தூய திரித்துவ ஆலயத்தில் அனைத்து திருச்சபை சார்பில், கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் சி.எஸ்.ஐ., ரோமன் கத்தோலிக்க திருச்சபை பங்கு தந்தைகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.