மாவட்டத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
கரூர் மாவட்டத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைகளில் வருகிற 9-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி முதல் உபவாசம் கடைபிடித்து 40 நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை கரூர் சர்ச் கார்னர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடினர்.
சிறப்பு பிரார்த்தனை
பின்னர் அவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு பவனியாக கரூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். இதையடுத்து தேவாலயத்தில் குருத்தோலை ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதேபோல் கரூர் புனித தெரசம்மாள் தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற 7-ந்தேதி புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்று, சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. 9-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தேவாலயங்களில் வரும் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.