கல்லறை தோட்டத்துக்கு பாதை வசதி கேட்டு கிறிஸ்தவர்கள் போராட்டம்
வள்ளியூரில் கல்லறை தோட்டத்துக்கு பாதை வசதி கேட்டு கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூரில் கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான கல்லறை தோட்டத்துக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடல் அடக்கம் நேற்று காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக கல்லறை தோட்டத்தில் குழி தோண்ட சென்றவர்களை தனிநபர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்தில் திரண்டு, இறந்தவரின் உடலுடன் சாலைமறியலில் ஈடுபட முடிவு செய்தனர்.
உடனே சேரன்மாதேவி உதவி கலெக்டர் (பயிற்சி) கிஷன்குமார், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, கல்லறை தோட்டத்தை பார்வையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து கல்லறை தோட்டத்துக்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு, அதன் வழியாக இறந்தவரின் உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். மேலும் அங்கு நில அளவீடு செய்து, கல்லறை தோட்டத்துக்கு நிரந்தர பாதை வசதி ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிறிஸ்தவர்கள் கலைந்து சென்றனர்.