கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது
x

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

அகல் விளக்குகள்

கார்த்திகை தீப திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூரில் வீடுகளில் பொதுமக்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி கோவில் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி-சவுந்தரநாயகி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கணம்புல்ல நாயனார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சொக்கப்பனை

தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் கோவில் வெளிப்புறத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அப்போது தீபம் சுடர்விட்டு எரிந்தது. அதனை பக்தர்கள் பயபக்தியுடன் இருகரம் கூப்பி தரிசித்தனர். பின்னர் சாமிகளின் திருவீதியுலா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விராச்சிலை ஈஸ்வரர் கோவில்

தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய கொப்பரை விளக்கு வாங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் சார்பில் கொண்டுவரப்பட்ட நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றப்பட்டது. பின்னர் 100 கிலோ எடை கொண்ட திரி லிங்க வடிவில் அமைக்கப்பட்டது. திரியின் மீது மெகா சைஸ் சூடத்தை வைத்து கோவில் அர்ச்சகர் விளக்கினை ஏற்றி வைத்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சின்னரெட்டிபட்டி ஆவுலிங்கேஸ்வரர் கோவில், தோகைமலை வரதராஜ பெருமாள் கோவில், மேல கம்பேஸ்வரம் பெருமாள் கோவில்களில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்பட்டது. பாதிரிப்பட்டி ஊராட்சி நாகநோட்டக்காரன்பட்டியில் சந்தன கருப்பண்ண சுவாமி கோவில் அருகே பொதுமக்களால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

செம்பொற்சோதீஸ்வரர் கோவில்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை செம்பொற்சோதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப நிகழ்ச்சியையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி செம்பொற்சோதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story